9 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல் கட்ட தேர்தல்; வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி - கலெக்டர் ஆய்வு


9 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல் கட்ட தேர்தல்; வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Dec 2019 4:15 AM IST (Updated: 26 Dec 2019 6:19 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணியை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 30–ந் தேதி (திங்கட்கிழமை) என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், தெள்ளார், பெரணமல்லூர் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. இந்த 9 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 76 பேரும், 181 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மீதமுள்ள 180 பதவிகளுக்கு 782 பேர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் 498 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிகளில் 25 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 473 பதவிகளுக்கு 1,614 பேர் போட்டியிடுகின்றனர்.

3 ஆயிரத்து 480 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 913 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 2,567 பதவிகளுக்கு 6 ஆயிரத்து 612 பேர் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

முதல் கட்டமாக 1,930 வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 379 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 37 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்களும், 54 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 8 லட்சத்து 65 ஆயிரத்து 259 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் கட்ட தேர்தலில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3–வது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 9 ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்கு பொட்டி, மை, சீல், நூல், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் சாக்கு பைகளில் வைக்கப்பட்டு லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும், சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், வனிதா, ஞானசேகரன் உள்பட 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 16 இன்ஸ்பெக்டர்கள், 398 சப்–இன்ஸ்பெக்டர்கள், 1,413 போலீசார் மற்றும் 476 ஆயுதப்படை போலீசார், 896 முன்னாள் ராணுவ வீரர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 310 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story