ராதாபுரம் அருகே, வேட்டைக்கு சென்ற 2 வாலிபர்கள் மீது தாக்குதல் - தனியார் காற்றாலை நிறுவன காவலாளிகள் 4 பேர் கைது
ராதாபுரம் அருகே வேட்டைக்கு சென்ற 2 வாலிபர்களை தாக்கிய, தனியார் காற்றாலை நிறுவன காவலாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராதாபுரம்,
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த காற்றாலை அமைந்துள்ள பகுதியில் மாடநாடார் குடியிருப்பை சேர்ந்த டெல்வின்(19), நெல்லை மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த பிரதீப்(24), அலெக்ஸ்(21), குமாரபுரத்தை சேர்ந்த பாலன்(24) ஆகிய 4 பேர் காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு காற்றாலை அமைந்துள்ள பகுதியில் ஜீப்பில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்தனர். அவர்கள் கையில் வேட்டையாடிய சில கவுதாரிகளை வைத்திருந்தனர்.
அந்த வாலிபர்களை, காவலாளிகள் 4 பேரும் பிடித்தனர். விசாரித்தபோது, ராதாபுரம் அருகிலுள்ள போலியன்குளத்தை சேர்ந்த அய்யப்பன்(24), ரவி(21) என்றும், தாங்கள் வேட்டைக்கு வந்ததாகவும் கூறினர். இதை நம்ப மறுத்த காவலாளிகள் அந்த 2 பேரையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த 2 பேரையும் அவர்கள் ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் காற்றாலையில் ஒயர் திருட முயன்றதாக காவலாளிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ராதாபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விணுகுமார் விசாரணை நடத்தினார். அப்போது அய்யப்பனும், ரவியும் காயங்களுடன் இருந்தனர். தாங்கள் வேட்டைக்கு வந்ததாகவும், பலமுறை கூறியும் அந்த 4 பேரும் தங்களை அடித்து காயப்படுத்தியதாகவும் அய்யப்பன் போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த 2 பேரும் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காற்றாலை நிறுவன காவலாளிகளான டெல்வின், பிரதீப், பாலன், அலெக்ஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story