வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன: ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு


வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன: ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 27 Dec 2019 4:00 AM IST (Updated: 26 Dec 2019 9:23 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதற்காக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று வாக்குப்பெட்டிகள் மற்றும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை-மயிலை ஆகிய 2 ஒன்றியங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி ஆண்டிப்பட்டி ஒன்றியம் மற்றும் கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 170 வாக்குச்சாவடிகளுக்கும், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 115 வாக்குச்சாவடிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாக்குப்பெட்டிகள் உள்பட 74 பொருட்கள் தனித்தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குப்பதிவு அலுவலர் தலைமையில் 7 பேர் கொண்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு அலுவலர்கள் தனி வாகனத்திலும், அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் மற்றொரு வாகனத்திலும் வாக்குச்சாவடிக்கு சென்றனர்.

இதேபோல் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் மலைக்கிராமங்களில் அமைந்துள்ளது. இதனால் மலைக்கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அலுவலர்கள், வாக்குப்பெட்டிகளுடன் போலீசார் பாதுகாப்புடன் முதலில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவு பெறும். வாக்குப்பதிவு முடிவடைந்ததும், கடமலை-மயிலை ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை மையமான மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளிக்கும், ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு பாரத்நிகேதன் பொறியியல் கல்லூரிக்கும் வாக்குப்பெட்டிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும். ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை ஒன்றியத்தில் இன்று நடைபெறும் முதற்கட்ட தேர்தல் பணிக்காக ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 25 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story