மாவட்டத்தில் தெளிவாக தெரிந்தது: சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
தேனி மாவட்டத்தில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
கம்பம்,
தேனி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி அருகே முல்லை நகர், கம்பம், போடி உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. இதனால் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
முல்லைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர். சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் பிரத்ேயக கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர். கிரகணம் பார்க்க வந்த மக்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் பனியாரம் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தேனி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சூரிய கிரகணத்தையொட்டி தெருவில் உலக்கையை நிறுத்தி வைத்து பொதுமக்கள் சோதித்து பார்த்தனர். கிரகணம் நடந்த நேரத்தில் உலக்கை சரியாமல் நேராக நின்றது. இதை மக்கள் வியந்து பார்த்தனர்.
சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கிரகண நேரம் முடிந்த பின்னரே கோவில் நடை திறக்கப்பட்டது. தேனியில் காலை 10.30 மணி வரை கிரகணம் தெளிவாக தெரிந்தது.
இதேபோல் கம்பம் வ.உ.சி. திடலில் சூரிய கிரகணத்தை பார்வையிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோமநாதன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த தொலை நோக்கி மற்றும் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story