தேவாலா பஜாரில், ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது


தேவாலா பஜாரில், ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2019 3:45 AM IST (Updated: 26 Dec 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

தேவாலா பஜாரில் ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

கூடலூர், தேவாலா பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தலைமை காவலர்கள் சந்திரன், மோகன் உள்ளிட்ட போலீசார் தேவாலா பஜாரில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மினி லாரி மற்றும் ஆட்டோ ஒன்று நின்றிருந்தது.

அவைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மினிலாரி, ஆட்டோவுக்குள் சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு ரகசியமாக விற்பது தெரியவந்தது. இதையொட்டி போலீசார் அதிரடியாக மினி லாரி, ஆட்டோவை கைப்பற்றினர். மேலும் அவைகளில் இருந்த 3 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது அதில் 3 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மினி லாரி, ஆட்டோ மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, தேவாலா போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்தனர். பின்னர் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூடலூரில் இருந்து தேவாலாவுக்கு கடத்தி வந்து புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர் புகையிலை பொருட்கள் விற்ற கூடலூரை சேர்ந்த கண்ணன்(வயது 40), மினி லாரி டிரைவர் சுப்பிரமணி(38), நந்தட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகே‌‌ஷ்வரன்(53) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story