கர்நாடகத்தில் சூரிய கிரகணமும், மக்கள் நடத்திய வழிபாடுகளும்
கர்நாடகத்தில் சூரிய கிரகணத்தையொட்டி மக்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தினர்.
கலபுரகி,
கர்நாடகத்தில் சூரிய கிரகணத்தையொட்டி மக்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தினர்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
சூரிய கிரகணம்
சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதால்தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அந்த நிகழ்வு நேற்று ஏற்பட்டது. இந்த நிகழ்வு நேற்று காலை தோராயமாக 8.08 மணி அளவில் தொடங்கி காலை 11.19 மணி வரை நடந்தது. அப்போது சூரியனை நிலவு கொஞ்சம், கொஞ்சமாக மறைத்தது. பின்னர் முழுமையாக மறைத்தது.
அந்த சமயத்தில் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றியது. இந்த அபூர்வ நிகழ்வை பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் பார்த்தனர். இது ஒருபுறம் இருக்க சூரிய கிரகணத்தையொட்டி மக்கள் பலவிதமான வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
சாணக்குழியில் குழந்தைகள்...
கலபுரகி மாவட்டம் தாஜா சுல்தான்புரா கிராமத்தில் சூரிய கிரகணம் ஏற்படும் வேளையில் குழந்தைகள் வெளியே வந்தால் அவர்களுக்கு சரும கோளாறு ஏற்படும் என்றும், அதனால் அவர்களை கால்நடைகளின் சாணக்குழியில் கழுத்து வரை புதைத்து வைக்க வேண்டும் என்றும் தகவல்கள் பரவின. இதனால் அந்த கிராமத்தில் வசித்து வரும் பலர் தங்களது குழந்தைகளை கால்நடைகளின் சாணக்குழியில் கழுத்து வரை புதைத்து வைத்தனர். அப்போது அவர்கள் சாமி பூஜை செய்து வழிபட்டனர்.
ஹாவேரி மாவட்டம் ஆனகல் தாலுகா காசனூரு கிராமம், இரேகெரூர் தாலுகா போகாவி கிராமம் ஆகிய கிராமங்களில் வசித்து வரும் மக்கள், ஒரு வாளியில் பாதியளவு உலக்கையை செங்குத்தாக எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்க வைத்தனர். அப்போது உலக்கைகள் சூரிய கிரகணம் முடியும் வரை கீழே விழாமல் செங்குத்தாக நின்றன. இந்த சந்தர்ப்பத்தில் கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதேபோல் சாம்ராஜ்நகர், பெலகாவி ஆகிய மாவட்டங்களிலும் மக்கள் உலக்கைகளை வைத்து பூஜை செய்தனர்.
பிரத்யேக கண்ணாடிகள்
ஹாவேரி பகுதியில் காலை 8.04 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. காலை 9.26 மணிக்கு சூரியனை நிலவு முழுமையாக மறைத்தது. முழு சூரிய கிரகணம் 3 நிமிடம் நீடித்தது. அதன்பின்னர் சூரியனைவிட்டு நிலவு விலக தொடங்கியது. காலை 11.04 மணிக்கு சூரியனை விட்டு நிலவு முழுமையாக விலகியது.
இதேபோல் உடுப்பி, உப்பள்ளி, பல்லாரி, மங்களூரு, தார்வார், மண்டியா, கார்வார், சிவமொக்கா, பெலகாவி, மைசூரு உள்பட பல்வேறு இடங்களில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதை மக்கள் பலரும் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் பார்த்தனர்.
வீடுகளில் முடங்கிய மக்கள்
தாவணகெரேவில் சூரிய கிரகணத்தின்போது, சூரிய ஒளி தங்கள் மீது பட்டால் அவர்களுக்கு ஏதாவதொரு தோஷம் பிடித்துவிடும் என்று தகவல் பரவியது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதேபோல் பல்லாரி மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா மாட்லகேரி தாண்டா கிராமத்திலும் தகவல் பரவியதால், அந்த கிராம மக்களும் வீடுகளிலேயே முடங்கினர்.
மேலும் பணியாபுரா கிராமத்தில் ஒரே குழந்தை மட்டும் உள்ள பெற்றோர்கள் மீது சூரிய கிரகணத்தால் தோஷம் ஏற்படும் என்றும், அதற்கு கோவில்களில் வீற்றிருக்கும் மரத்திற்கு பூஜை செய்து பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது. இதையடுத்து ஒரே குழந்தை கொண்ட பெற்றோர்கள் கோவிலில் குவிந்து தோஷங்கள் கழிய மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
சுடுகாட்டில் உணவு சாப்பிட்டனர்
சூரிய கிரகணத்தையொட்டி உடுப்பியில் உள்ள கிருஷ்ணா மடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது திரளான பக்தர்கள் மடத்தில் அதிகாலை முதலே குவிந்து கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டனர். மேலும் மடத்தில் உள்ள கல்யாணி குளத்தில் புனித நீராடினர்.
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா காளிஹள்ளி கிராமத்தில் சூரிய கிரகணத்தையொட்டி பரவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக சில இளைஞர்கள் சுடுகாட்டில் வைத்து உணவு சமைத்து சாப்பிட்டனர்.
Related Tags :
Next Story