கூடலூர் அருகே, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கூடலூர் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூர்,
இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றது. இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கூடலூர், தேவர்சோலை பகுதியில் கடந்த வாரம் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அரசியல் கட்சியினர் நேற்று காலை 11 மணிக்கு பேரணி சென்றனர். இதில் எல்லமலை, பெரியசோலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியானது நியூகோப்பில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலை வழியாக சென்று பார்வுட் தபால் நிலையம் முன்பு வந்தடைந்தது. பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர் ரகுமான் தாரினி தலைமை தாங்கினார். அய்யப்பா சேவா சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பார்வுட் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகி சின்னவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சகாதேவன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி வேலாயுதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி குஞ்சுமுகமது, அ.ம.மு.க. நிர்வாகி சாஜி உள்பட ஏராளமான அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story