நாங்குநேரியில் ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி வீட்டில் 21 பவுன் நகை கொள்ளை


நாங்குநேரியில் ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி வீட்டில் 21 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 26 Dec 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரி வீட்டில் 21 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நாங்குநேரி, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்மாடத்தெருவில் வசிப்பவர் அந்தோணி ராஜ். இவர் வணிகவரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளைபோன நகைகள், பணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

இதுதொடர்பாக பெங்களூருவில் இருந்த அந்தோணிராஜிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். நேற்று மாலையில் அந்தோணிராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது 21 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story