பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடின கர்நாடகத்தில் சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்து மகிழ்ந்தனர் கோவில்களில் நடைகள் சாத்தப்பட்டன


பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடின கர்நாடகத்தில் சூரிய கிரகணத்தை மக்கள் பார்த்து மகிழ்ந்தனர் கோவில்களில் நடைகள் சாத்தப்பட்டன
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 26 Dec 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தெரிந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். இதையொட்டி மாநிலம் முழுவதும் கோவில்களில் நடைகள் சாத்தப்பட்டன.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் தெரிந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். இதையொட்டி மாநிலம் முழுவதும் கோவில்களில் நடைகள் சாத்தப்பட்டன.

சூரிய கிரகணம்

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்தியாவில் கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த நிகழ்வு நடந்தது. குறிப்பாக கர்நாடகத்தில் பெங்களூரு, மங்களூரு, பெலகாவி, உப்பள்ளி, மைசூரு, உடுப்பி, கொப்பல், ஹாசன் உள்ளிட்ட பல நகரங்களில் சூரிய கிரகண நிகழ்வு நடந்தது. பெங்களூருவில் வானத்தில் நிகழ்ந்த அரிய சூரிய கிரகண நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நேரு கோளரங்கம், அறிவியல் மையம் மற்றும் மியூசியத்தில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து, பிரத்யேக கண்ணாடியை அணிந்து, சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் பெங்களூருவில் மேகமூட்டம் காரணமாக கிரகண நிகழ்வை சரியாக பார்க்க முடியவில்லை. காலை 8.05 மணிக்கு தொடங்கி இந்த நிகழ்வு காலை 11.35 மணி வரை நீடித்தது.

சாலைகள் வெறிச்சோடின

பொதுமக்கள் 8 மணிக்கு முன்பாகவே காலை சிற்றுண்டியை முடித்தனர். 8 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வரவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு சாலைகள், வாகனங்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆட்டோக்கள் குறைவாக ஓடியது. பி.எம்.டி.சி. பஸ்கள் மட்டும் எப்போதும் போல் ஓடின. இரு சக்கர வாகனங்களும் மிக குறைவான எண்ணிக்கையில் காணப்பட்டது. மொத்தத்தில் நகரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கடைகள் மூடப்பட்டிருந்தன. கிரகண நிகழ்வு நிறைவடைந்த பிறகே கடைகளை வியாபாரிகள் திறந்தனர். பெரிய வணிக வளாகங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் யாரும் அங்கு வரவில்லை. திரையரங்குகளில் சினிமா காட்சிகள் தாமதமாக தொடங்கப்பட்டன. பெங்களூருவில் கோவில்களில் 7 மணிக்கு நடைகள் சாத்தப்பட்டன. கிரகண நிகழ்வு நிறைவடைந்த பிறகு அதாவது பகல் 12 மணிக்கு கோவில்கள் திறக்கப்பட்டு, சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

முதல்-மந்திரி எடியூரப்பா

மாநிலத்தின் அதிகார மையமான விதான சவுதா, ஊழியர்கள் மற்றும் குறை கூற வரும் பொதுமக்களால் பரபரப்பாக காட்சி அளிக்கும். ஆனால் நேற்று ஊழியர்கள் கூட காலையில் வேலைக்கு வரவில்லை. பொதுமக்களும் தென்படவில்லை. இதனால் விதான சவுதா வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். தொலைக்காட்சியில் சூரிய கிரகண நிகழ்வை கண்டுகளித்தனர்.

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவரை பார்க்கவும் யாரும் வரவில்லை. யாருக்கும் அனுமதியும் வழங்கப்படவில்லை. கிரகணம் முடிந்த பிறகு, அவர் தனது வீட்டிலேயே பரிகார பூஜைகளை செய்தார். கிரகணத்தையொட்டி சில நாட்களுக்கு முன்பே கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள கோவிலுக்கு சென்று பரிகார பூஜைகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்டில் உலக்கை

கிரகணம் நிகழ்வு முடிந்த பிறகு பொதுமக்கள் தங்களின் வீடுகளை தண்ணீரில் சுத்தம் செய்தனர். பூஜைகளை செய்து, சமையல் செய்து உணவு சாப்பிட்டனர். பெங்களூரு, மைசூரு, சிக்பள்ளாப்பூர், ஹாவேரி, ராய்ச்சூர், கோலாரில் வெள்ளை நிறத்தில் கிரகணம் தெரிந்தது. பெலகாவியில் தங்க நிறம், உடுப்பியில் தங்கம் மற்றும் பச்சை நிறத்தில் சூரிய கிரகணம் முழுமையாக காட்சி அளித்தது.

பெலகாவியில் ஒரு சில்வர் தட்டில் உலக்கையை நிறுத்தி வைத்தனர். கிரகணத்தின்போது, அந்த உலக்கை தட்டில் எந்த பிடிமானமும் இல்லாமல் நின்றது. கிரகணம் முழுமையாக நிறைவடைந்த பிறகு அந்த உலக்கை தானாகவே சாய்ந்து விழுந்தது. ஒவ்வொரு முறையும் சூரிய கிரகணத்தின்போது, அந்த கிராம மக்கள் இந்த முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

நடைகள் சாத்தப்பட்டன

கலபுரகியில் குழந்தைகளை மாட்டுச்சாண குழியில் போட்டு வைத்திருந்தனர். கழுத்து வரை அவர்கள் அந்த குழியில் வைக்கப்பட்டிருந்தனர். கொல்லூர் மூகாம்பிகை, குக்கே சுப்பிரமணியா, மைசூரு சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட இந்த பிரபலமான கோவில்களின் நடைகள் சாத்தப்பட்டன. கிரகணம் நிகழ்வு முடிவடைந்த பிறகு கோவில்களின் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Next Story