மக்களின் உணர்வுகளை புரிந்து குடியுரிமை திருத்த சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரலாம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட தேர்தல் இன்றும் (வெள்ளிக்கிழமை), 2-வது கட்ட தேர்தல் வருகிற 30-ந்தேதியும் (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ நேற்று கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தை தொடங்கினார்.
பின்னர் அவர் இலந்தைப்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சன்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி, அமைதியான முறையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத்திட்டங்களை பாராட்டி, பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து உள்ளனர். மேலும் செல்லும் இடமெல்லாம் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளிக்கிறார்கள்.
இந்த ஆண்டு குடிமராமத்து பணி சிறப்பாக நடைபெற்று, பருவமழையும் நன்கு பெய்ததால், காணும் இடமெல்லாம் செழுமையாக உள்ளது. இதனால் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 12 பஞ்சாயத்து யூனியன்களிலும் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதி.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு போன்றவை தேசிய அளவிலான பிரச்சினை. ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவற்றில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரலாம். பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story