கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்த கிராம மக்கள்
கருவேப்பிலைபாளையத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி,
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூர் ஒன்றியம் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள சிறுத்தனூர் மதுரா கருவேப்பிலைபாளையம் கிராமத்தை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துடன் சேர்த்து விழுப்புரம் மாவட்டதில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எங்கள் ஊரில் இருந்து திருநாவலூர் ஒன்றியம் தான் அருகில் உள்ளது.
இதன்காரணமாக எங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள நாங்கள் அங்கு சென்றுவரத்தான் எளிதாக இருக்கிறது. எனவே எங்கள் கிராமத்தை திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துடன் சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கக்கூடாது என கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று ஊர்வலமாக கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் தங்கள் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கூடாது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துடனே இருக்க வேண்டும் என கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் ஒப்படைக்க அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 10 பேர் மட்டும் உள்ளே செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஞானமூர்த்தி தலைமையில் 10 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதாவிடம் கிராம மக்களின் வாக்காளர் அட்டையை ஒப்படைத்ததோடு, கோரிக்கை மனுவையும் அளித்தனர். அந்த மனுவை பெற்ற அவர், இது குறித்து உயர் அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதற்கு அவர்கள் எங்கள் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்தால் நாங்கள் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story