திருவெண்ணெய்நல்லூர் அருகே, ஏரியில் மூழ்கி அக்காள்- தங்கை பலி


திருவெண்ணெய்நல்லூர் அருகே, ஏரியில் மூழ்கி அக்காள்- தங்கை பலி
x
தினத்தந்தி 27 Dec 2019 4:45 AM IST (Updated: 27 Dec 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் மூழ்கி அக்காள்- தங்கை பரிதாபமாக இறந்தனர்.

அரசூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அருங்குறுக்கை மதுரா புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 38), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (34). இவர்களது மகன் லோகேஸ்வரன் (11) திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். மகள்களான அக்‌ஷிதா (7) புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பும், ரக்‌ஷிதா (6) அதே பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் அண்ணாமலையும், சித்ராவும் நேற்று காலை சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு சென்று விட்டனர். அவர்கள் வெளியூருக்கு செல்வதற்கு முன் அண்ணாமலை தன்னுடைய அக்காள் ஜோதியிடம் சென்று குழந்தைகள் 3 பேரையும் பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு சென்றார்.

இந்த சூழலில் நேற்று மதியம் ஜோதி, கடைக்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது மகன் அய்யப்பனும், அண்ணாமலையின் குழந்தைகள் 3 பேரும் இருந்துள்ளனர். அப்போது அக்‌ஷிதாவும், ரக்‌ஷிதாவும் அங்குள்ள ஏரிக்கரையோரம் இயற்கை உபாதையை கழித்துவிட்டு வருவதாக அய்யப்பனிடம் கூறிவிட்டு சென்றனர்.

ஆனால் வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர், அங்குள்ள ஏரிக்கு சென்று பார்த்தபோது, அங்கு இருவரும் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் ஏரியில் இறங்கி குழந்தைகளை தேடினர். அப்போது குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி கிடந்தனர். உடனே அவர்கள் இருவரையும் தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தனர். இருவருமே மயங்கிய நிலையில் இருந்ததால் அவர்களை அருகில் உள்ள டி.குன்னத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதையை கழித்துவிட்டு பின்னர் ஏரியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகளின் உடலை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த சம்பவத்தினால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story