எந்த தியாகத்தையும் செய்ய தயார்; புதுச்சேரியில் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி


எந்த தியாகத்தையும் செய்ய தயார்; புதுச்சேரியில் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 27 Dec 2019 5:00 AM IST (Updated: 27 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என காங்கிரஸ் பேரணியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரோடியர் மில் மைதானத்தில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை தேசியக்கொடி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் ரோடியர் மில் திடலில் இருந்து பேரணி நேற்று மாலை புறப்பட்டது. இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேசியக்கொடி ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கபிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், மேலிட பார்வையாளருமான சஞ்சய் தத், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி. உள்பட காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

இந்திய நாடு எல்லா மதத்தினருக்கும் சமமான நாடு. குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலமாக இன, மத கலவரத்தை மத்தியில் ஆளும் மோடி அரசு தூண்டியுள்ளது. மத்திய அரசு சிறுபான்மையினரை திட்டமிட்டு பழிவாங்குகிறது.

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை 14 மாநில முதல்-அமைச்சர்கள் நிறைவேற்ற மாட்டோம் என்கின்றனர். அதேபோல் புதுச்சேரியிலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். அதற்காக என்ன நிலைமை ஏற்பட்டாலும் கவலை இல்லை. அதையும் மீறி அமல்படுத்தினால் எங்கள் பிணத்தின் மேல் ஏறி தான் நிறைவேற்ற வேண்டும்.

மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடுகள், பொது சிவில் சட்டம் ஆகியவற்றின் மூலமாக நாட்டில் ரத்த கலவரத்தை உருவாக்க பாரதீய ஜனதா அரசு முயற்சிக்கிறது. நாட்டு மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. நாட்டின் நலமும், மாநிலத்தின் நலமும் தான் முக்கியம். மக்களுக்காக எந்த தியாகத்தை செய்யவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன், கூட்டணி கட்சிகளான தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்பட கூட்டணி கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story