புதுச்சேரியில் வளைய சூரிய கிரகணம் - ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
புதுவை கடற்கரையில் வளைய சூரிய கிரகணத்தை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
புதுச்சேரி,
சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அந்த சமயம் சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் நிலவு வருவதால், பூமியில் இருந்து சூரியனை சரிவர பார்க்க முடியாது. இத்தகைய சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. இது வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்பட்டது.
இந்த சூரிய கிரகணத்தை காண புதுவை அறிவியல் இயக்கம் புதுச்சேரியில் கடற்கரை, கோளரங்கம், நைனார்மண்டபம் உள்ளிட்ட 40 இடங்களில் ஏற்பாடு செய்திருந்தது.
சூரிய கிரகணத்தை விசேஷ கண்ணாடிகள் மூலமும் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலமாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோரும் விசேஷ கண்ணாடி மூலம் சூரியகிரகணத்தை பார்த்தனர்.
சூரிய கிரகணத்தை பார்க்க கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். அவர்களுக்கு சூரிய கிரகணம் குறித்து அறிவியல் இயக்க தலைவர் ஹேமாவதி மற்றும் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
புதுவையில் காலையில் மேகமூட்டம் இல்லாததால் சூரிய கிரகணம் மிக தெளிவாக காணப்பட்டது. காலை 8.08 மணிக்கு தொடங்கிய இந்த கிரகணம் பகல் 11.19 மணி வரை தெரிந்தது.
பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளியில் சூரிய கிரகணத்தை மாணவிகள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனை மாணவிகள் சிறப்பு கண்ணாடி மூலம் கண்டு ரசித்தனர். அவர்களுக்கு சூரிய கிரகணம் எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து பள்ளி முதல்வர் நீல அருள்செல்வி, தலைவர் இருதய மேரி, துணைத்தலைவர் நீலம் அன்புச்செல்வி, இயற்பியல் ஆசிரியர் ஜெயராஜ் ஆகியோர் விளக்கினர்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு புதுவையில் நேற்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 6 மணி அளவில் நடை சாத்தப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பொதுமக்கள் சாமிதரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story