காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இரட்டை நிலைப்பாடு மங்களூரு வன்முறையில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை


காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இரட்டை நிலைப்பாடு மங்களூரு வன்முறையில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை
x
தினத்தந்தி 27 Dec 2019 3:30 AM IST (Updated: 27 Dec 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு வன்முறையில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை என்று ஷோபா எம்.பி. கூறினார்.

பெங்களூரு, 

மங்களூரு வன்முறையில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை என்று ஷோபா எம்.பி. கூறினார்.

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்கள்தொகை கணக்கெடுப்பு

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) திட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி புரிந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் கொண்டு வந்தது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக இந்த ஏற்பாடு அப்போது செய்யப்பட்டது. முன்னாள் உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னோட்டமாக இந்த தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படுவதாக கூறினார்.

ஆனால் இப்போது எங்கள் அரசு கொண்டு வந்துள்ள அதே திட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. அக்கட்சி இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது. இதை கண்டிக்கிறேன். சிறுபான்மையின மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது. தனது அரசியல் ஆதாயத்திற்காக அந்த சமூக மக்களை காங்கிரஸ் தூண்டிவிடுகிறது. மத அடிப்படையில் மக்களின் ஆதரவை பெற அக்கட்சி முயற்சி செய்கிறது.

தொடர்பு இல்லை

மங்களூருவில் காஷ்மீரில் நடப்பது போல் நடந்த வன்முறையில் அமைதியை விரும்பும் உள்ளூர் முஸ்லிம்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அந்த வன்முறையில் பி.எப்.ஐ. மற்றும் கே.எப்.டி. ஆகிய அமைப்புகளுக்கு தான் தொடர்பு உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அந்த அமைப்புகளை சேர்ந்த 1,600 பேர் மீது இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு, விடுவிக்கப்பட்டனர். இதன் காரணமாக மங்களூருவில் வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தன்வீர் சேட் எம்.எல்.ஏ.வையும் தாக்கினார்கள். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

மங்களூரு துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்ற முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதே நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இந்து வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார். அதுகுறித்து அவர்கள் எந்த கருத்தையும் கூறவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களின் இரட்டை நிலைப்பாட்டை கண்டிக்கிறேன்.

இவ்வாறு ஷோபா கூறினார்.

Next Story