உத்தவ் தாக்கரேயை வலைத்தளத்தில் விமர்சித்த வாலிபரை தாக்கி மொட்டையடித்த 4 பேர் கைது


உத்தவ் தாக்கரேயை வலைத்தளத்தில் விமர்சித்த வாலிபரை தாக்கி மொட்டையடித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2019 4:00 AM IST (Updated: 27 Dec 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை வலைத்தளத்தில் விமர்சித்த வாலிபரை தாக்கி மொட்டையடித்த சிவசேனா தொண்டர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை வலைத்தளத்தில் விமர்சித்த வாலிபரை தாக்கி மொட்டையடித்த சிவசேனா தொண்டர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மொட்டையடித்தனர்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் செய்த டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி, ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இது தொடர்பாக மும்பை வடலா சாந்திநகரை சேர்ந்த ஹிராமணி திவாரி(வயது 32) என்பவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை விமர்சித்து முகநூலில் கருத்து பதிவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவசேனா கட்சியை சேர்ந்த சிலர் ஹிராமணி திவாரி வீட்டுக்கு சென்று அவரை தாக்கி மொட்டை அடித்தனர்.விசுவ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த ஹிரா மணி திவாரிக்கு நேர்ந்த இந்த சம்பவத்துக்கு பாரதீய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கவர்னரிடம் மனு

சயான் கோலிவாடா தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன், ஹிராமணி திவாரியுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

நேற்று முன்தினம் கேப்டன் தமிழ்ச்செல்வன் தலைமையில் பாரதீய ஜனதாவினர் வடலா டி.டி. போலீஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஹிராமணி திவாரியை தாக்கி மொட்டையடித்த சிவசேனாவினரை உடனடியாக கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

கைது

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வடலா டி.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று ஹிராமணி திவாரியை தாக்கியதாக சிவசேனா கட்சியை சேர்ந்த சமாதான் ஜக்தார், பிரகாஷ் ஹஸ்பே, சத்யவான், காந்த் யாதவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story