மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சூரிய கிரகண மாயாஜாலத்தை பார்த்து வியந்த மக்கள் மும்பை நேரு கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு
மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகண மாயாஜால நிகழ்வை மக்கள் பார்த்து வியந்தனர்.
மும்பை,
மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகண மாயாஜால நிகழ்வை மக்கள் பார்த்து வியந்தனர். இதற்காக மும்பை நேரு கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
சூரிய கிரகணம்
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்தியாவில் மராட்டியம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த அபூர்வ நிகழ்வை காண முடிந்தது. மராட்டியத்தில் மும்பை, தானே, கொங்கன், புனே, நாசிக் உள்பட பல பகுதிகளில் சூரிய கிரகண மாயாஜாலம் வானில் நிகழ்ந்தது.
இதை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மும்பை நேரு கோளரங்கம் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அங்கு வந்து, பிரத்யேக கண்ணாடியை அணிந்து, சூரிய கிரகணத்தை பார்த்து வியந்தனர்.
மும்பையை பொறுத்தவரை காலை 8.04 மணி அளவில் சூரிய கிரகண நிகழ்வு தொடங்கியது. சூரியனை சந்திரன் மெதுவாக மறைத்து வந்த இந்த அரிய நிகழ்வு காலை 10.30 மணி வரை நீடித்தது.
வெளியில் தலைகாட்ட மறுத்த மக்கள்
சூரிய கிரகணத்தையொட்டி பொதுமக்கள் பலர் நேற்று காலை 8 மணிக்கு முன்பாகவே சிற்றுண்டியை முடித்தனர். காலை 8 மணிக்கு மேல் பொதுமக்கள் அதிகளவில் வெளியில் தலைகாட்டவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மும்பை கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆட்டோக்கள் குறைவாக ஓடியது. இரு சக்கர வாகனங்களும் மிக குறைவான எண்ணிக்கையில் காணப்பட்டது.
பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கிரகண நிகழ்வு நிறைவடைந்த பிறகே கடைகளை வியாபாரிகள் திறந்தனர்.
கோவில்களில் பரிகார பூஜை
மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில், மாட்டுங்கா முருகன் கோவில், செம்பூர் முருகன் கோவில் உள்பட பல கோவில்களில் காலை 7 மணிக்கு நடை சாத்தப்பட்டன. கிரகண நிகழ்வு நிறைவடைந்த பிறகு கோவில்களில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
இதேபோன்ற அரிய நிகழ்வு மீண்டும் வருகிற 2031-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story