வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணி - கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு


வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணி - கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 27 Dec 2019 3:00 AM IST (Updated: 27 Dec 2019 5:38 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பொருட்கள் அனுப்பும் பணிகளை கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்,

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி முதல்கட்டமாக ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய யூனியன்களில் இன்று (வெள்ளிக் கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 813 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 6,192 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனையொட்டி வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள், தாள் முத்திரை, அழியாத மை, தேர்தல் படிவங்கள் உள்ளிட்ட மொத்தம் 72 வகையான தேர்தல் தளவாட பொருட்கள் அனைத்தும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர் குழுக்கள் மூலமாக போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி ஆகிய யூனியன் அலுவலகங்களுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் தளவாட பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், உதவி திட்ட அலுவலர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டெல்லா, அப்துல் ஜப்பார், தங்கபாண்டியன், ரமேஷ் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதேபோல 2-ம் கட்டமாக வருகிற 30-ந்தேதி பரமக்குடி, போகலூர், நயினார்கோவில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய யூனியன்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி 1,006 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஆயிரத்து 823 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Next Story