காதலை ஏற்காத விருதுநகர் இளம்பெண் குத்திக்கொலை - வாலிபர் கைது
காதலை ஏற்காத விருதுநகர் இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 50) கட்டிட மேஸ்திரியான இவர் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவர் சென்னையில் வேலை செய்தபோது கொத்தனார் வேலைக்கு வந்த ஆந்திர மாநிலம், விஜயநகரத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பட்டிபுலத்தில் குடும்பம் நடத்தி வருகிறார்.
இவர்களது மகள் லாவண்யா (17) தாய், தந்தையுடன் பட்டிபுலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். ஜெயராஜ் வேலை செய்யும் பட்டிபுலத்தில் உள்ள கட்டிடத்தில் ஆந்திர மாநிலம், விஜயநகரத்தை சேர்ந்த துர்காராவ் (21) என்பவரும் வேலை செய்து வருகிறார்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் உள்ள பள்ளியில் லாவண்யாவும், துர்காராவும் ஒரே பள்ளியில் 12- ம் வகுப்பு வரை படித்து வந்ததாகவும், அப்போது லாவண்யாவை துர்காராவ் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் தெரிகிறது.
அங்கு துர்காராவ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் 12-ம் வகுப்புடன் தனது படிப்பை முடித்து கொண்டு லாவண்யா பட்டிபுலம் வந்து பெற்றோருடன் தங்கி விட்டார். மேற்படிப்பு படிக்கவில்லை.
எப்படியாவது லாவண்யாவை அடையும் நோக்கத்தில் 6 மாதத்திற்கு முன்பு இங்கு வந்த துர்காராவ், அவரது பெற்றோரிடம் குறிப்பாக லாவண்யாவின் தாயாரிடம் நைசாக பேசி இங்குள்ள கட்டிடத்தில் ஜெயராஜ் மூலம் கொத்தனார் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஒரே ஊர் என்பதால் தனது கணவரிடம் பேசி லாவண்யாவின் தாயார் இவரை வேலைக்கு சேர்க்க சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக துர்காராவ் ஒழுக்கமானவர் போல நடித்து அவரது பெற்றோரை ஏமாற்றி அந்த கட்டிடத்தில் அவர்களின் அறைக்கு பக்கத்திலேயே தங்கி உள்ளார்.
இங்கேயே கட்டிடத்தில் தங்கி வேலை செய்ததால் அடிக்கடி லாவண்யாவிடம் தன்னுடைய காதலை ஏற்க மீண்டும் கட்டாயப்படுத்தி உள்ளார். லாவண்யா இவருடைய காதலை ஏற்காமல் உதாசீனப்படுத்தியதால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த துர்காராவ் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். பலமுறை லாவண்யா அவரை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று கட்டிடத்தின் வெளியே நின்று கொண்டிருந்த லாவண்யாவை துர்காராவ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினார். இதில் வயிறு, நெஞ்சு பகுதியில் 6 இடங்களில் கத்தி, குத்து விழுந்த நிலையில், ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த லாவண்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா நேற்று மாலை 5 மணியளவில் பரிதாபமாக இறந்தார். பிறகு தகவல் அறிந்து மாமல்லபுரம் உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலை வழியாக தப்பி ஓட முயன்ற துர்காராவை துரத்தி சென்று கைது செய்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story