புதுக்கோட்டை ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல் கட்டமாக புதுக்கோட்டை, அன்னவாசல், கந்தர்வகோட்டை, கீரனூர், விராலிமலை, கறம்பக்குடி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், ஒரு ஊராட்சி மன்ற தலைவர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 26 ஊராட்சி மன்ற தலைவர்கள், 15 ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் 219 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஆயிரத்து 536 ஆண் வாக்காளர்கள், 35 ஆயிரத்து 347 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 69 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணி வரை 21 ஆயிரத்து 31 வாக்காளர்கள் ஓட்டு போட்டிருந்தனர். இதன்படி 30.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மதியம் 1 மணி வரை மொத்தம் 34 ஆயிரத்து 707 வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு இருந்தனர். இது 49.66 சதவீதம் ஆகும்.
ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 149 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடி மையங்களில் பந்தல்கள் அமைக்காததால், வாக்களிக்க வந்தவர்கள் அருகே உள்ள மரத்து நிழலில் காத்திருந்து வாக்களித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என 4 வாக்குகள் அளிக்க வேண்டியது இருந்ததால், முதியவர்கள் மற்றும் பெண்கள் சிறிது அவதிப்பட்டனர். இதனால் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போட உரிய வசதிகள் செய்யப்படாததால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
புதுக்கோட்டை ஒன்றியத்தில் சில வாக்குச்சாவடிகளின் அருகே வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் ஓட்டுப்போட வந்தவர்களிடம் தங்களது சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டு பிரசாரம் செய்தனர். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியின் அருகிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் நின்று கொண்டே இருந்தனர்.
சில இடங்களில் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல முடியாத பொதுமக்களை அப்பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்து வந்து, வாக்களிக்க செய்தனர். குறிப்பாக புதுக்கோட்டை அடப்பன்காரசத்திரம் வாக்குச்சாவடிக்கு 90 வயது மூதாட்டியை வாக்களிப்பதற்காக அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவர் அழைத்து வந்தார். ஆனால் மூதாட்டி ஓட்டுப்போட்டு விட்டு திரும்பி வந்தபோது, அரசியல் கட்சியை சேர்ந்தவர் அந்த மூதாட்டியை கண்டுகொள்ளவில்லை. இதனால் அந்த மூதாட்டி தள்ளாடிய படியே வீட்டிற்கு நடந்து சென்றார்.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வாகவாசலில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் காலை 10 மணி நிலவரப்படி 20 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு தகவலாக அனுப்பி வைக்கப்படுகிறது, என்றார்.
Related Tags :
Next Story