பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கவுரவ கொலை செய்ய திட்டம் - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாமியாா் புகார்


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கவுரவ கொலை செய்ய திட்டம் - போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாமியாா் புகார்
x
தினத்தந்தி 28 Dec 2019 4:30 AM IST (Updated: 27 Dec 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கவுரவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக மாமியார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் அருகே பூதப்பாண்டியை அடுத்த துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவருடைய மனைவி தானம்மாள் (வயது 53). இவர் நேற்று நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உறவினர்களுடன் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2-வது மகன் பியூட்லினும் (28) வெள்ளிச்சந்தை அறப்புரை காலனியை சேர்ந்த கணபதி மகள் சரண்யாவும் (24) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி சரண்யாவுக்கும் எனது மகனுக்கும் (பியூட்லின்) திருமணம் நடைபெற்றது. மறுநாள் போலீசார் வீட்டிற்கு வந்து விசாரணைக்கு வரும்படி எனது மகனை அழைத்தனர். இதையடுத்து பியூட்லினும், அவரது மனைவி சரண்யாவும் விசாரணைக்கு செல்ல புறப்பட்டனர்.

அப்போது போலீஸ் நிலையம் அருகே வைத்து ஒரு கும்பல் அவர்களை தாக்கியது. பின்னர் அவர்கள் சரண்யாவை கடத்திச் சென்றுவிட்டனர். இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் கடத்தி சென்ற எனது மருமகளை(சரண்யா) கணபதி உள்பட அவரது உறவினர்கள் கவுரவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே சரண்யாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story