ஆரல்வாய்மொழி அருகே, கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் வேட்பாளர் விபத்தில் சிக்கினார் - இருவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
ஆரல்வாய்மொழி அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் வேட்பாளர் விபத்தில் சிக்கினார். இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கன்னியாகுளம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மனைவி உமா (வயது 37). இவர் உள்ளாட்சி தேர்தலில் ராஜாக்கமங்கல ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். நேற்று உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில் காலை 7 மணிக்கு கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்ெமாழி அருகே தேவசகாயம் மவுண்டில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்ய சென்றனர்.
அங்கு பிரார்த்தனை செய்த பின்பு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
வெள்ளமடம், கரையான்குழி பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த டெம்போ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பெண் வேட்பாளருக்கும், அவரது கணவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story