ஆலங்குளம் அருகே பழிக்குப்பழியாக பயங்கரம்: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
ஆலங்குளம் அருகே பழிக்குப்பழியாக ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே பழிக்குப்பழியாக ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கூலி தொழிலாளி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்த சுப்பையா மகன் குமார் என்ற கெவுளி குமார் (வயது 35), கூலி தொழிலாளி. இவருக்கு கனகா (30) என்ற மனைவியும், சுப்ரியா (12) என்ற மகளும், விக்னேஸ்வரன் (10) என்ற மகனும் உள்ளனர். ஆலங்குளம் அருகே மேலகுத்தப்பாஞ்சான் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அங்கு அவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அங்கிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் அருகே ராம்நகருக்கு குடும்பத்துடன் வந்தார். அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
சரமாரியாக வெட்டிக்கொலை
இந்த நிலையில் குமார் நேற்று மாலை ராம்நகரில் அம்பை மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் சுக்கு காப்பி குடிக்க வந்தார். அப்போது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 3 பேர் கும்பல், குமாரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் வைத்திருந்த அரிவாளால், குமாரை சரமாரியாக வெட்டியது.
இதில் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த கும்பல் அவசரம் அவசரமாக ஒரு மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு, மற்றொரு மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றது.
பழிக்குப்பழியாக...
இதுகுறித்த தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். குமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலையாளிகள் விட்டுச்சென்ற மோட்டார்சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
குமார் மீது போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், அவர் பிரபல ரவுடி என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவர் குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story