பட்டியலில் பெயர் இல்லை என கூறி ஓட்டு போட அனுமதி மறுப்பு: வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு வாக்காளர்கள் போராட்டம்
வெண்ணந்தூர் அருகே, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி ஓட்டு போட அனுமதி மறுத்ததால் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு வாக்காளர்கள் பொதுமக்களுடன் போராட்டம் நடத்தினார்கள். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வெண்ணந்தூர்,
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஓ.சவுதாபுரம் கிராமம். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் ஓட்டு போட இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு நேற்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களித்து வந்தனர்.
மதியவேளையில் அதே பகுதியை சேர்ந்த தேவகுமார், பிரகாஷ் ஆகிய இருவரும் வாக்களிக்க சென்றனர். அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என கூறி 2 பேருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அப்போது அந்த வாக்குச்சாவடியை பார்வையிடுவதற்காக நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி வந்தார். அவரிடம் தங்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்று முறையிட்டனர். அதற்கு அவர், இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் முடிவெடுக்க முடியும் என்று கூறிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதன்பின்னர் இருவரும் வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து பொதுமக்களோடு சேர்ந்து வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் இருந்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
Related Tags :
Next Story