பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் தேவராஜன் மரணம் - உடல் தானம்
பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் தேவராஜன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை இறந்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், டாக்டருமாக இருந்தவர் தேவராஜன்(வயது 71). இவர் 1996 முதல் 2001 வரை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தார். இவர் பெரம்பலூர் சுற்றியுள்ள பகுதியில் பூச்சி மருந்து (விஷம்) அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்கள், விஷப்பிராணிகள் கடித்து அனுமதிக்கப்பட்டவர்கள் என ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து அவர்களை உயிர்பிழைக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த டாக்டர் தேவராஜன் நேற்று காலை இறந்தார். அவரது உடல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வெங்கடாஜலபதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. டாக்டர் தேவராஜனின் உடலுக்கு முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதியுமான எம்.பி.யுமான ஆ.ராசா தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், டாக்டர்கள் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் மனவளக்கலை மன்றம், அரிமா சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே டாக்டர் தேவராஜனின் மனைவி டாக்டர் புவனேஸ்வரி, திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கணவரின் உடலை தானம் செய்வதாக தகவல் கொடுத்து, அதற்கான உறுதிமொழி கடிதத்தையும் மருத்துவக்கல்லூரி டீனுக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் டாக்டர் தேவராஜனின் உடல் இறுதி ஊர்வலமாக மாவட்ட தி.மு.க. அலுவலகம் வரை எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டாக்டர் தேவராஜனின் உறவினர்கள் அவரது உடலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு பெரம்பலூர் திரும்பினர்.
Related Tags :
Next Story