செய்யாறு தொகுதியில் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு


செய்யாறு தொகுதியில் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 28 Dec 2019 3:45 AM IST (Updated: 28 Dec 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு தொகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர்.

செய்யாறு, 

செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் முதல் கட்டமான உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் 217 வேட்பாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 107 வேட்பாளர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், 15 வேட்பாளர்கள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கும், 1,066 வேட்பாளர்கள் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

வெம்பாக்கம் ஒன்றியத்தில் 204 வேட்பாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 81 வேட்பாளர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், 8 வேட்பாளர்கள் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிக்கும், 790 வேட்பாளர்கள் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

அனக்காவூர் ஒன்றியத்தில் 163 வேட்பாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 61 வேட்பாளர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், 5 வேட்பாளர்கள் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிக்கும், 680 வேட்பாளர்கள் கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

செய்யாறு சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கும் முன்னே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தூசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தன்னுடைய வாக்கினை முதல் நபராக நின்று வாக்களித்தார். அவர் வாக்களித்த போது வாக்கு முத்திரையில் சரியாக மை பதியவில்லை, இதனை பார்த்த அவர் ‘மை பேடை’ மாற்றக்கூறி பிறகு வாக்களித்தார்.

பெருங்கட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளியை உறவினர் தன்னுடைய இடுப்பில் தூக்கி சென்று வாக்களிக்க செய்தார்.

காழியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு மதிய உணவு வழங்க அறுசுவை உணவு தயார் செய்து இருந்தனர். காழியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தண்டரை, எரையூர், கழனிபாக்கம், முக்கூர் உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச்சாவடி மையங்களின் அருகில் கட்சி முகவர்கள் அதிகளவில் திரண்டு காணப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

கூடுதல் மாவட்ட சூப்பிரண்டு வனிதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story