கீழ்பென்னாத்தூர் அருகே, வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலி; 17 பேர் படுகாயம் - துக்கம் விசாரிக்க சென்றபோது பரிதாபம்


கீழ்பென்னாத்தூர் அருகே, வேன் கவிழ்ந்து 2 பெண்கள் பலி; 17 பேர் படுகாயம் - துக்கம் விசாரிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 28 Dec 2019 4:15 AM IST (Updated: 28 Dec 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் அருகே துக்கம் விசாரிக்க சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் பலியானார்கள். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கீழ்பென்னாத்தூர்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வணக்கம்பாடியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்று துக்கம் விசாரிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் சாவல்பூண்டி, சின்னியம்பேட்டை பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர்கள் வேனில் வணக்கம்பாடிக்கு புறப்பட்டனர். அந்த வேன் கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தது. வேனை டிரைவர் சுரே‌‌ஷ் ஓட்டிச்சென்றார். அந்த வேனில் டிரைவரை தவிர 19 பேர் இருந்ததாக தெரிகிறது.

சிறுநாத்தூரில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் சென்றபோது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாவல்பூண்டியை சேர்ந்த நடேசன் மனைவி மங்கை (வயது 65), சின்னியம்பேட்டையை சேர்ந்த ஏழுமலை மனைவி அமுதா (45) ஆகியோர் அந்த இடத்திலேயே இறந்தனர்.

மேலும் வேனில் இருந்த அவர்களது உறவினர்களான சின்னியம்பேட்டையை சேர்ந்த விஜயா, வீரம்மாள், சாவல்பூண்டியை சேர்ந்த முனியம்மாள், விருத்தம்மாள், நாகம்மாள், சுதா, கார்த்தி, மகேந்திரன், சுமதி, வள்ளி, கலைவாணி, கீழ்அனைக்கரையை சேர்ந்த முருகன், பிச்சம்மாள், கனகவள்ளி, மணியம்மாள், அலமேலு, எல்லம்மாள் ஆகிய 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் இறந்த மங்கை, அமுதா ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து நடந்ததும் வேனை ஓட்டிச்சென்ற டிரைவர் சுரே‌‌ஷ் தலைமறைவாகிவிட்டார். அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவர் சுரேஷை தேடி வருகின்றனர்.

Next Story