நாகை அருகே, தரமில்லாத மையை பயன்படுத்தியதாக புகார் - வாக்குச்சாவடி மையம் முன்பு அனைத்து கட்சியினர் திரண்டதால் பரபரப்பு


நாகை அருகே, தரமில்லாத மையை பயன்படுத்தியதாக புகார் - வாக்குச்சாவடி மையம் முன்பு அனைத்து கட்சியினர் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Dec 2019 3:45 AM IST (Updated: 28 Dec 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே தரமில்லாத மையை பயன்படுத்தியதாக புகார் தெரிவித்து, வாக்குச்சாவடி மையம் முன்பு அனைத்து கட்சியினர் திரண்ட தால் பரபரப்பு ஏற் பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோவில், கொள்ளிடம் ஆகிய 6 ஒன்றியங்களில் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தநிலையில் நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி சுற்றுச்சுவரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் வாக்குச்சாவடி முன்பு வாகனங்களை நிறுத்தி வாக்காளர்களிடம் அனைத்து கட்சியினரும் வாக்குகள் சேகரித்தனர். வாக்குப்பதிவு நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் எவ்விதமான விளம்பரங்கள் மற்றும் வாக்குகள் சேகரிப்பது தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தேர்தல் தொடர்பான விளம்பர போஸ்டர்களை கிழிக்க தொடங்கினர். மேலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு சென்று வாக்குகள் சேகரிக்கும்படி போலீசார் கட்சியினரிடையே அறிவுறுத்தினர். உடனே அங்கு நின்ற அ.தி.மு.க.வினர் சுற்றுச்சுவரில் ஒட்டியுள்ள போஸ்டர்களை கிழிக்க கூடாது என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையிலான அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வாக்குவாதம் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டருக்குள் நின்று யாரும் வாக்குகள் சேகரிக்க கூடாது என்றும், 200 மீட்டருக்குள் உள்ள அனைத்து போஸ்டர்களையும் கிழிக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வாக்குச்சாவடி மைய சுற்றுச்சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர்களை போலீசார் கிழித்தனர்.

சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3, 4 மற்றும் 7 வார்டுகளுக்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 3 மற்றும் 4 வார்டுகளுக்கான வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க கொடுக்கப்பட்ட மை தரமானதாக இல்லை. இதனால் வாக்குச்சீட்டில் வாக்குப்பதிவு செய்யும் போது வாக்குப்பதிவு சரியாக விழவில்லை. எனவே வாக்களிப்பதற்கு வசதியாக தரமான மை மற்றும் வாக்குப்பதிவு அச்சு ஆகியவற்றை வைக்க வேண்டும். தரமான மை மற்றும் அச்சு இல்லாத காரணத்தால் காலை 7 மணி முதல் 10 மணி வரை பதிவான சுமார் 50-க்கும் மேற்பட்ட வாக்குகள் செல்லாததாகி விட்டது என்று அனைத்து கட்சி நிர்வாகிகள் கூறினர்.

இதை கண்டித்து சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் புதிதாக மை மற்றும் அச்சு ஆகியவற்றை வாக்குச்சாவடி மையத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் கூடியிருந்தவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

நாகை ஒன்றியம் தெத்தி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குள் வந்து வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களிடம் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிலர் வாக்கு சேகரித்ததாக தெரிவிகிறது. இதை தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் தட்டி கேட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் சம்பவ இடத்திற்கு யாரும் வரவில்லை. இதனால் இரண்டு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த போலீசார் அனைவரையும் வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்றினர்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட 215 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெண்கள் திரண்டு வந்து வாக்களித்தனர். சில வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்த மாதிரி போஸ்டர்களில் வேட்பாளர்களின் வரிசை மாறி இருந்தது. இதனால் வாக்காளர்கள் குழப்பமடைந்தனர். முதலைமேடுதிட்டு கிராமத்தில் வாக்குச்சாவடி மாறியதால் நடுவக்காடு கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள் குழம்பினர். பின்னர் அதிகாரிகள் பார்வையிட்டு மீண்டும் அவர்களுக்கு முதலைமேடு திட்டிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் மாங்கணாம்பட்டு, அனுமந்தபுரம் ஆகிய ஊர்களில் தொடக்கப்பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பல்வேறு வேட்பாளர்களின் முகவர்கள், ஆதரவாளர்கள் திரண்டு நின்றனர். இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர். அப்போது அங்கு வந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பார்வையிட்டு குறிப்பிட்ட வரையறை தாண்டி வாக்குச்சாவடி அருகில் செல்லக்கூடாது என்று வேட்பாளர்களின் முகவர்கள், ஆதரவாளர்களை எச்சரித்து சென்றார். சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் வாக்காளர்கள் அதிகமாக குவிந்ததால் கூடுதலாக 1½ மணி ேநரம் வாக்குப்பதிவு நடந்தது.

திருக்கடையூர் சன்னதி தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மயிலாடுதுறை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், நாகை குற்றப்பதிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறையாறு போலீஸ் சிறப்பு பிரிவு ஏட்டு மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் 30-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தபால் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரி செல்வம், ஊராட்சி ஒன்றிய ஆணையர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தபால் வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

Next Story