பேரிடர் மீட்புபணிக்கான உபகரணங்கள் - நாராயணசாமி வழங்கினார்


பேரிடர் மீட்புபணிக்கான உபகரணங்கள் - நாராயணசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 28 Dec 2019 4:30 AM IST (Updated: 28 Dec 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் மீட்பு பணிக்கான உபகரணங்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

புதுச்சேரி, 

புதுவை யூனியன் பிரதேசம் தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழை காலங்களில் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதுமட்டுமில்லாமல் சுனாமி போன்ற பாதிப்புகளும் உண்டாக வாய்ப்பு உள்ளது.

சில நேரங்களில் எதிர்பாராத தீ விபத்துகளும் ஏற்படுகிறது. இதுபோன்ற இயற்கை மற்றும் மனிதர்களால் உண்டாகும் பேரிடர்களால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க புதுச்சேரியில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை செயல்படுத்த ஒவ்வொரு துறையும் தனித்தனியே அவர்களுக்கென உபகரணங்களை வைத்துள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு காலங்களில் தேவையான மீட்பு பணிகளை செய்வதற்கு உபகரணங்கள் பல்வேறு துறைகளுக்கு மாவட்ட பேரிடர் நிதியிலிருந்து வாங்கப்பட்டு உள்ளது.

மேலும் பேரிடர் மீட்பு பணியை விரைவாக செயல்படுத்த வாகனம் ஒன்றும் வாங்கப்பட்டள்ளது. மாநில அவசரகால செயல் மையத்திற்கு அழைப்பு வந்தவுடன் இந்த வாகனத்தில் மீட்பு குழுவினர் விரைவாக சென்று மீட்பு பணி்களை மேற்கொள்வார்கள்.

குறிப்பாக மரம் விழுந்தால் அதை வெட்டி அகற்றுவதற்கான கருவிகள், மின்சாரம் இல்லாத இடத்தில் பணிகளை மேற்கொள்ள அதிக ஒளிதரும் விளக்குகள், தீப்பிடிக்காத உடைகள், மழை கோட்டுகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட 20 வகையான உபகரணங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

இந்த உபகரணங்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கி, பேரிடர் மீட்பு வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஷாஜகான், கலெக்டர் அருண், பேரிடர் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் ஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story