குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதீய ஜனதா ஊர்வலம் - என்.ஆர்.காங்கிரஸ்- அ.தி.மு.க. புறக்கணிப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. புறக்கணித்தன.
புதுச்சேரி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் ஊர்வலம் நடத்த முடிவு செய்திருந்தன.
இதன்படி நேற்று காலை ஊர்வலம் நடந்தது. இதற்காக புதுவை சுதேசி மில் அருகே பாரதீய ஜனதா கட்சியினர் திரண்டனர்.
அங்கிருந்து ஊர்வலமாக அவர்கள் புதுவை தலைமை தபால் நிலையம் நோக்கி புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தில் வந்தவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்.
இந்த ஊர்வலத்தில் பாரதீய ஜனதா பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், முதலியார்பேட்டை செல்வம், துரை.கணேசன், மாநில செயலாளர்கள் நாகராஜ், சாய் ஜெ.சரவணக்குமார், மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி மற்றும் நிர்வாகிகள் அகிலன், வி.சி.சி.நாகராஜ், தே.மு.தி.க. தலைவர் வி.பி.பி.வேலு உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செண்பகா ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதான கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆனால் நேற்றைய ஊர்வலத்தில் இந்த இரு கட்சிகளுமே கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. ஊர்வலத்தில் கலந்துகொள்ளமாட்டோம் என்று நேற்று முன்தினமே அ.தி.மு.க. அறிவித்தது.
அ.தி.மு.க.வின் அறிவிப்பினை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரசும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கிவிட்டது. வருகிற தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற முடியாமல் போய்விடக்கூடும் என்ற அச்சத்தில் இக்கட்சிகள் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story