ஜெகதீஷ்ஷெட்டருக்கு கவர்னர் பதவி? எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத்துக்கு மந்திரி பதவி
மந்திரி ஜெகதீஷ்ஷெட்டருக்கு கவர்னர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,
மந்திரி ஜெகதீஷ்ஷெட்டருக்கு கவர்னர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆச்சரியமான விஷயங்கள்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி செயல்பட்டு வருகிறது. மந்திரிசபையில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் இடம் பெற்றுள்ளார். அவர் தொழில்துறையை நிர்வகித்து வருகிறார். பொதுவாக முதல்-மந்திரி பதவியை வகித்தவர்கள், அதற்கு கீழான பதவிக்கு நியமிக்கப்பட மாட்டார்கள். இதற்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்தவர்கள், பிறகு மந்திரி பதவியை வகித்த உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இவ்வாறான நிகழ்வுகள் அதிகம் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்துள்ளது.
எடியூரப்பா மந்திரிகள் பட்டியலை வெளியிட்டபோது, அதில் ஜெகதீஷ்ஷெட்டர் பெயர் இடம் பெற்றிருந்ததை கண்டு அரசியல் தலைவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் சற்று ஆச்சரியப்பட்டனர். முன்னாள் முதல்-மந்திரிக்கு மந்திரி பதவியும், இதுவரை மந்திரி பதவியையே வகிக்காத, அஸ்வத் நாராயண் துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டதும் ஆச்சரியமான விஷயங்களாக பார்க்கப்பட்டது.
கோபமாக பதிலளித்தார்
இதுகுறித்து கருத்து கேட்டபோது, ஜெகதீஷ்ஷெட்டர் கோபமாக பதிலளித்தார். துணை முதல்-மந்திரிக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடையாது என்று கூறினார். ஆனால் முன்னாள் முதல்-மந்திரி ஒருவர் மந்திரியாக பணியாற்றுவது அரசுக்கு பல்வேறு நிலைகளில் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி வருவதாக பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.
இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இதை சரிசெய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் மந்திரிசபையில் இருந்து ஜெகதீஷ்ஷெட்டரை நீக்கிவிட்டு, கட்சியில் விசுவாசமிக்க தலைவராக திகழும் அவரை ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பசவராஜ் பொம்மை
மேலும் மந்திரிசபையில் இருந்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, கோடா சீனிவாச பூஜாரி ஆகியோரை கைவிட எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 9 பேருக்கும், தோல்வி அடைந்த எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் ஆகியோருக்கும் மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி எடியூரப்பா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story