இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி ஜனவரி 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்
ஜனவரி 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
பெங்களூரு,
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி ஜனவரி 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா எம்.பி. பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பயப்பட மாட்டோம்
பெங்களூருவில் உள்ள எங்கள் கட்சியின் அலுவலகத்தில் சிலர் புகுந்து, இரண்டு சக்கர வாகனங்களை தீயிட்டு எரித்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். யாராக இருந்தாலும், மாற்று கருத்து உடையோர், ஜனநாயக ரீதியில் போராட எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் வன்முறை மூலம் மிரட்ட முயற்சி செய்தால் அதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம்.
பிரதமர் மோடி, அமித்ஷா போன்று நிறைய பேரை நாங்கள் பார்த்துவிட்டோம். எங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை இந்த நாட்டையும், எங்கள் கட்சி அலுவலகத்தையும் காக்க போராடுவோம். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் பங்கெடுத்துள்ளது. இந்த நேரத்தில் எங்கள் கட்சி அலுவலகத்திற்கு தீவைத்துள்ளனர். இது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
பா.ஜனதா அரசே காரணம்
எங்கள் கட்சியின் தொண்டர்கள், இதுபோன்ற சம்பவங்களை கண்டு பயந்து ஓடி செல்பவர்கள் அல்ல. நாங்கள் போராடியே கட்சியை வலுப்படுத்தும் பணியை செய்து வருகிறோம். அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக எதிர்த்து போராடினாலும் சரி, தாக்குதல் நடத்தினாலும் சரி எதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். எங்கள் கட்சி அலுவலகத்தில் தீவைத்து தாக்கிய சம்பவத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா அரசே காரணம்.
இந்த சம்பவத்தை தீவிரமாக கருதி, தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க அரசியல் சாசனத்தில் இடம் இல்லை. இந்த சட்டத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட கட்சியோ அல்லது மதத்தினரோ போராட்டம் நடத்தவில்லை. இந்த சட்டத்தை புரிந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
பாடம் கற்க வேண்டும்
பா.ஜனதாவினர் சர்தார் வல்லபாய் பட்டேலை புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் அவரது கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதல்படி செயல்படுகிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் மக்கள்விரோத போக்கே காரணம். மராட்டிய மாநில தேர்தலிலும் இதே நிலை தான் ஏற்பட்டது. இந்த தோல்வியில் இருந்து பா.ஜனதா பாடம் கற்க வேண்டும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி ராஜினாமா செய்யவைத்து, பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களை பிளவு படுத்தும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை வாபஸ் பெற வேண்டும்.
வேலை நிறுத்த போராட்டம்
இந்த குடியுரிமை திருத்த சட்டத்தின் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை சிறிய அளவிலான போராட்டங்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி 8-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன.
ராணுவ தலைமை தளபதி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் குறித்து குறை கூறி கருத்து தெரிவித்துள்ளார். இது சரியல்ல. ராணுவ தளபதி, அரசியல் பிரச்சினையில் தலையிடுவது ஆபத்தானது. இத்தகையை போக்கை ஏற்க முடியாது. காங்கிரஸ் உள்பட மதசார்பற்ற கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றன. மேற்குவங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் கொள்கை முரண்பாடு இருந்தாலும், தேசிய அளவில் நாங்கள் இந்த பிரச்சினையில் இணைந்து செயல்படுகிறோம்.
இவ்வாறு டி.ராஜா கூறினார்.
Related Tags :
Next Story