சின்னசேலம் பகுதியில், ரூ.50 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது


சின்னசேலம் பகுதியில், ரூ.50 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2019 3:45 AM IST (Updated: 28 Dec 2019 6:12 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் பகுதியில் ரூ.50 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

சின்னசேலத்தில் நாகுப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 31), கள்ளக்குறிச்சி தாலுகா ஈரியூரை சேர்ந்த அழகேசன் (30), செந்தில்குமார் (44), சங்கராபுரம் தாலுகா பூட்டை மெயின்ரோட்டை சேர்ந்த சுரே‌‌ஷ்கண்ணா (41), சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (40), விஜய புரத்தை சேர்ந்த வேலாயுதம் (51) ஆகிய 6 பேர் சேர்ந்து தனியார் நிதி நிறுவனம் நடத்தி அங்குள்ள சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி நம்ப வைத்து ரூ.50 கோடி வரை வசூலித்து மோசடி செய்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், சுரே‌‌ஷ்கண்ணா, வேலாயுதம் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அழகேசன், செந்தில்குமார், செல்வம் மற்றும் பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாயை வசூல் செய்து அந்த தொகையை வெங்கடேசனிடம் கொடுத்து அதற்காக அவரிடமிருந்து கமி‌‌ஷன் தொகையை பெற்ற சின்னசேலம் பகுதியை சேர்ந்த 37 பேர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த மோசடியில் தொடர்புடைய அழகேசன் நேற்று சின்னசேலத்தில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்வதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசிங்கம், குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அழகேசனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story