பெரியகங்கணாங்குப்பத்தில், வரிசைமாறி நின்றதால் வாக்களிக்க முடியாமல் போன வேட்பாளர்
பெரியகங்கணாங்குப்பத்தில் வரிசைமாறி நின்றதால் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் வாக்களிக்க முடியாமல் போனது. இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாக்குப்பெட்டியை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சியில் 1 முதல் 6 வார்டுகள் உள்ளன. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாறன் என்பவர் போட்டியிட்டார். இவர் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் நேற்று மாலை வாக்களிக்க சென்றார். அப்போது மாலை 5 மணியானதால், வேட்பாளர் மாறன் உள்பட அங்கிருந்த 104 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதில், மாறன் 5-வது வார்டில் தனது வாக்கை பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவர் தவறுதலாக 4-வது வார்டில் வாக்குப்பதிவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் மாறனிடம் நீங்கள் 5-வது வார்டில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனால் அவர் 5-வது வார்டு பகுதியினர் வாக்களிக்கும் இடத்திற்கு அவசரமாக சென்றார். ஆனால் அங்கு இருந்த அனைவரும் வாக்களித்து முடித்துவிட்டதால், அதிகாரிகள் வாக்குப்பெட்டிக்கு சீல் வைத்துவிட்டனர். இதனால் அதிகாரிகளுக்கும், மாறனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் அதிகாரிகளிடம் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் திட்டவட்டமாக வாக்குப்பெட்டிக்கு சீல் வைத்த பிறகு வாக்களிக்க முடியாது என கூறிவிட்டனர்.
இதையடுத்து மாறன் நான் வாக்களிக்க அனுமதி அளித்தால் தான் வாக்குப்பெட்டியை அங்கிருந்து எடுத்துச் செல்ல அனுமதிப்பேன் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அங்கிருந்த அதிகாரி, மாறனிடம் நீங்கள் வாக்களித்த சீட்டுகளை எங்களிடம் வழங்குங்கள். அதனை உயரதிகாரியிடம் கொடுத்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்கள்.
இதைத் தொடர்ந்து வேட்பாளர் மாறன் தனது வாக்குகளை பதிவு செய்து அதற்கான சீட்டுகளை அலுவலரிடம் வழங்கிவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் கலைந்து சென்றார். பின்னர் வாக்குப்பெட்டியை அதிகாரிகள் அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story