தேர்தல் பணியில் அதிகாரிகளால் குளறுபடி
அதிகாரிகளால் தேர்தல் பணியில் குளறுபடி ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 517 பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 1,617 பேர் போட்டியிட்டனர்.இங்கு 1 லட்சத்து 90 ஆயிரத்து 329 வாக்காளர்கள் உள்ளனர்.இவர்கள் வாக்களிக்க வசதியாக 326 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடி களுக்கு தேவையான பொருட்கள் நேற்று முன்தினம் மதியம் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் லாரிகளில் அனுப்பும் பணி தொடங்கியது. இந்த பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது.
வழக்கமாக மாலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று சேரும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் நேற்று முன்தினம் இரவு 10 மணியை கடந்து தாமதமாக சென்றுள்ளன. இதனால் வாக்குச்சாவடி அலுவலர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். அவர்கள் வாக்குப்பதிவுக்கு தயாராவதற்கு அதிகம் நேரம் ஆனதாக கூறப்படுகிறது.
அதேபோல் வாக்குச்சாவடி வெளியில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் பல இடங்களுக்கு சென்று சேரவில்லை என்று புகார்கள் எழுந்தன.பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் வேட்பாளர்களின் எதிர்ப்பால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது. சாமிநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சுவரொட்டி ஒட்டிய பின்னரே வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் வேட்பாளர்கள் கூறியதால் வேட்பாளர்களின் விவரம் அடங்கிய சுவரொட்டிகள் கொண்டு வரப்பட்டு 30 நிமிடத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியிலும் வேட்பாளர்களின் விவரம் ஒட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.பின்னர் அந்த பஞ்சாயத்து செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்து தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தேவையான சுவரொட்டியை அதிகாரியிடம் கேட்டு பெற்று சென்று பின்னர் ஒட்டி உள்ளார்.இதேபோல் பல வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் குறித்த அறிவிப்பு சுவரொட்டி ஒட்டாமல் வாக்குப்பதிவு நடந்துள்ளது.இதற்கு வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஊரக தேர்தலில் மட்டும் 3500-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு காலை மற்றும் மதியம் உணவு கொடுக்கப்படவில்லை. இதனால் இவர்கள் நீண்ட நேரம் காலை உணவு அருந்தாமல் வாக்குப்பதிவு பணிகளை கவனித்தனர்.பின்னர் அரசியல் கட்சி பிரமுகர் சிலர் தாங்களாக முன்வந்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உணவு அளித்தனர்.
இதே போல் மதியம் சாப்பாடு சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் இருந்ததால் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த அதிகாரிகளும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.அதே போல் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு செய்தி சேகரிக்கவும், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய வசதியாக வாக்குச்சாவடிக்குள் செல்ல உரிய அனுமதி கடிதம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வழங்குவது வழக்கம்.ஆனால் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது இந்த அனுமதி கடிதம் வழங்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சில இடங்களில் வெளியூர் போலீஸ் அதிகாரிகள் இருந்ததால் புகைப்படம் எடுக்கவும், வாக்குச்சாவடிகள் நிலவரம் அறிந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை அன்றும் இதே நிலை நீடிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story