பெரம்பலூர்- வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறைகளில் பூட்டி ‘சீல்' வைப்பு


பெரம்பலூர்- வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறைகளில் பூட்டி ‘சீல் வைப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 4:30 AM IST (Updated: 28 Dec 2019 8:09 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்- வேப்பூர் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி ‘சீல்'வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 77.40 சதவீதம் வாக்குகள் பதிவானது. பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மொத்தம் 293 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் நேற்று முன்தினம் மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடி அலுவலர்களால் ‘சீல்‘ வைக்கப்பட்டன. பின்னர் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 122 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 149 வாக்கு பெட்டிகள் லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன், அதற்கான வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு அறையில் 55 வாக்கு பெட்டிகளும், மற்றொரு அறையில் 94 வாக்கு பெட்டிகளும் வைக்கப்பட்டன. இதேபோல் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 171 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன், அதற்கான வாக்கு எண்ணும் மையமான வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறைகளுக்கு ‘சீல்’ வைப்பு

பின்னர் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 2 அறைகளை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், முரளி ஆகியோர் முன்னிலையில் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டது. இதேபோல் வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளும் பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டன.

Next Story