வாலாஜாவில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவுபடுத்தப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வாலாஜாவில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாலாஜா,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா நகரம் மிக பழமையான நகரம். மேலும் தமிழகத்தின் முதல் நகராட்சி என்ற சிறப்பையும் பெற்றதாகும். இத்தகைய பெருமை வாய்ந்த வாலாஜா நகரில் தற்போது 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
வாலாஜா நகரின் வழியாக சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையே நகரின் பஜார் பகுதி சாலையாகவும், பிரதான சாலையாகவும் உள்ளது. காலை முதல் இரவு வரை இந்த சாலையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
7 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சாலையின் இருபுறங்களிலும் நடைபாதை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் அகலம் குறுகி போனது. மக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட இந்த நடைபாதையில் நடந்து செல்ல வழி இல்லாத அளவிற்கு கடைகள், வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் சாலையில்தான் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
நடைபாதை சாலையை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டதால் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு வருவோர் தங்களின் வாகனங்களை சாலை ஓரத்திலேயே விட்டு செல்கின்றனர். ஏற்கனவே அகலம் குறுகிவிட்ட சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வது, பொதுமக்கள் நடந்து செல்வது, இது தவிர கால்நடைகளும் சுற்றித்திரிவது என போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.
இவ்வளவு நெரிசல்மிக்க சாலையில் ஒரே நேரத்தில் இரு பெரிய வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முயலும் போது விபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் வரிசை கட்டி நின்று விடுகின்றன.
இது தவிர நடைபாதையும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலைக்கு சென்று விட்டது. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் சேதமடைந்த நடைபாதையை அகற்றி சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகி கலெக்டரும் இருப்பதால் உடனடியாக கலெக்டர் இதை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story