குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாசனில் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாசனில் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா தலைமையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஹாசன்,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாசனில் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா தலைமையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம்
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தன. கர்நாடகத்திலும் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் 28-ந் தேதி(அதாவது நேற்று) ஹாசனில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எச்.டி.ரேவண்ணா தலைமையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்த பேராட்டத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எச்.கே.குமாரசாமி(சக்லேஷ்புரா-ஆலூர் தொகுதி), ஏ.டி.ராமசாமி(அரக்கல்கோடு), சிவலிங்கேகவுடா(அரிசிகெரே), சி.என்.பாலகிருஷ்ணா(சென்னராயப்பட்டணா), ஹாசன் தாலுகா ஜனதாதளம்(எஸ்) தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் ஆர்.கிரீசிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு ஹாசன் டவுனில் உள்ள ஹேமாவதி சிலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம்நிவாஸ் செபட் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதேபோல, கோலார் மாவட்டம் பங்காருபேட்டையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாராயணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story