தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பெண் வேட்பாளரை பாம்பு கடித்தது


தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பெண் வேட்பாளரை பாம்பு கடித்தது
x
தினத்தந்தி 29 Dec 2019 4:45 AM IST (Updated: 29 Dec 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. பெண் வேட்பாளரை பாம்பு கடித்தது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூர்,

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நாகனூர் ஊராட்சி கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி தனலட்சுமி (வயது 33). இவர் தோகைமலை ஒன்றியக்குழு 11-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பாக போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை நாகனூர் ஊராட்சி கலிங்கப்பட்டி அருகே வீரமலை அடிவாரத்தில் தனது ஆதரவாளர்களுடன் தனலட்சுமி பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒருவரது வீட்டுக்கு தனலட்சுமி வாக்குகேட்க சென்றார். அந்த வீட்டின் முன்பு மூங்கில் படலில் அவர் கையை வைத்துள்ளார். அந்த சமயம் மூங்கில் படலில் இருந்த பாம்பு ஒன்று தனலட்சுமியை கடித்து உள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் துடித்தார்.

தீவிர சிகிச்சை

பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் அந்த பாம்பை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடித்து கொன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர்.

அப்போது அது ரத்தசுருட்டை பாம்பு என தெரிந்தது. அதன் விஷத்தன்மையை அறிந்து அதற்கு ஏற்ப தனலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரசாரத்தின்போது அ.தி.மு.க. பெண் வேட்பாளரை பாம்பு கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story