நெல்லையில் பரபரப்பு பிரபல ஜவுளிக்கடையில் திடீர் தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு


நெல்லையில் பரபரப்பு பிரபல ஜவுளிக்கடையில் திடீர் தீ உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 29 Dec 2019 4:00 AM IST (Updated: 29 Dec 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லையில் பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பிரபல ஜவுளிக்கடை

நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் சரவணா செல்வரத்தினம் என்ற பெயரில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. 7 மாடியில் அமைக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் ஜவுளி மற்றும் வீட்டுக்கு தேவையான பர்னிச்சர்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, அந்த 7 மாடி கட்டிடம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில், கடையின் பெயர் பலகையை அலங்கார மின்விளக்குகளால் அமைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அந்த கடையின் மொட்டை மாடியில் உள்ள கடையின் பெயர் பலகையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. சிறிதுநேரத்தில் பெயர் பலகை முழுவதும் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடமும் தெரிவித்தனர். உடனே, கடை ஊழியர்கள் விரைந்து சென்று, 7 மாடிகளிலும் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களை வெளியேற்றினர்.

பின்னர் இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அந்த கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு செல்லும் மின் இணைப்பை கடை ஊழியர்கள் துண்டித்தனர். பின்னர் அங்கு தீப்பிடித்த பெயர் பலகையில் எரிந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து அங்கு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு

தீ விபத்து நடந்த பகுதியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். விழாக்காலத்தை முன்னிட்டு அந்த கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு தீ விபத்து நிகழ்ந்ததும், உடனே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் விசாரணை நடத்தினார். ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் தெற்கு புறவழிச்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். நெல்லையில் பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story