கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளில், சிறப்பு வகுப்பின்போது மாணவர்களுக்கு சிற்றுண்டி - கலெக்டர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் நடந்த அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி குறைந்த 20 அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பின் போது மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-
ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு போதிப்பதில் புதிய அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளை ஆசிரியர்கள் மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறையும் கற்றுக்கொடுக்கும் கோணங்களை மாற்றுவதோடு செயல்முறை வடிவத்தோடு மாணவர்களுக்கு கற்பித்தால் யாரும் தேர்வில் தோல்வி அடைய மாட்டார்கள். வகுப்புக்கு பாடம் நடத்த செல்வதற்கு முன்பாக நீங்கள் அந்த பாடத்தை முழுமையாக தெரிந்துகொண்டு மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி நடத்த வேண்டும். நீங்கள் பாட புத்தகங்களை படிக்கும்போது உங்களுக்கும் புதுப்புது சிந்தனைகள் வரும். பின்தங்கிய மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
நன்றாக படிக்காத மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி அவர்களை தேர்ச்சி பெற வையுங்கள். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதோடு மட்டுமின்றி சாலை விதிகள் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். ஆசிரியர்களும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கிருஷ்ணப்பிரியா, நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் குறைந்த தேர்ச்சி பெற்ற 20 அரசு பள்ளிகளில் காலை, மாலை சிறப்பு வகுப்பு நடத்த கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இந்த சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கிட ஒரு பள்ளிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, தனது விருப்ப நிதியில் இருந்து வழங்கினார். அப்போது வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் இந்த பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story