2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: வாக்கு சீட்டு கொண்டு செல்லும் வாகனங்கள் தயார் - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சீட்டுகளை கொண்டு செல்லும் வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு செய்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2-வது கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 919 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்கு சீட்டுகள், வாக்கு பெட்டிகள், அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்தநிலையில் தேர்தல் பொருட்களை அனுப்பி வைக்கும் வாகனங்கள், போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு செய்தார். அவருடைய உத்தரவின்பேரில் வாகனங்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் போலீசாருக்கும் தேர்தல் பணிகள் பிரித்து வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலுக்கு 1,839 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் என 360 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
தேர்தல் பொருட்களை அனுப்பி வைக்க 183 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த வாகனங்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2-ம் கட்ட தேர்தலில் 163 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் இருக்க போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story