கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 6 அடி குறைந்தது


கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 6 அடி குறைந்தது
x
தினத்தந்தி 29 Dec 2019 3:45 AM IST (Updated: 29 Dec 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 6 அடி குறைந்து 61.89 அடியாக உள்ளது.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து கடந்த 80 நாட்களுக்கும் மேலாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மழை நின்றுவிட்டதால் அணைக்கான நீர்வரத்து கணிசமாக குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 6 அடி குறைந்துள்ளது. கடந்த வாரம் 68 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 61.89 அடியாக குறைந்துள்ளது.

இதற்கிடையே கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் தொடர்ந்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு அணை நீர்மட்டம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 61.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 808 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,860 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 3 ஆயிரத்து 970 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Next Story