பலத்த சோதனைக்கு பின்னரே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல வேட்பாளர், முகவர்களுக்கு அனுமதி


பலத்த சோதனைக்கு பின்னரே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல வேட்பாளர், முகவர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 29 Dec 2019 4:15 AM IST (Updated: 29 Dec 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

பலத்த சோதனை செய்த பின்னரே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல வேட்பாளர், முகவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அத்துடன் செல்போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், வத்தலக்குண்டு, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 7 ஒன்றியங்களில் மொத்தம் 1,160 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. அதையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் வாக்குப்பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அந்தந்த ஒன்றிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு யாரும் செல்ல முடியாத வகையில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தையும் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் உள்ள தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் பார்வையிடும் வகையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் டி.வி.க்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக உள்ளதா? அந்த அறைக்குள் அனுமதியின்றி யாரேனும் செல்கின்றனரா? என்பதை தேர்தல் அலுவலர்களும், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் என அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வாக்கு எண்ணும் மையத்தில் அவ்வப்போது மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story