ஒட்டன்சத்திரம் அருகே, காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


ஒட்டன்சத்திரம் அருகே, காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 Dec 2019 3:45 AM IST (Updated: 29 Dec 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னிவாடி, 

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நீலமலைக்கோட்டை, கிணத்துப்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம், மொச்சை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இந்தநிலையில் சமீபகாலமாக இந்த பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமின்றி தென்னை, வாழை மரங்களையும் வேரோடு பிடுங்கி விடுகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி கன்னிவாடி வனத்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று ஒட்டன்சத்திரம்-செம்பட்டி சாலையில் நீலமலைக்கோட்டை பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் ேபாலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு வாரத்தில் காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இ்ந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story