ஜீவசமாதி அடைய முருகன் தொடர் உண்ணாவிரதம் - 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக வக்கீல் தகவல்


ஜீவசமாதி அடைய முருகன் தொடர் உண்ணாவிரதம் - 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக வக்கீல் தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2019 4:30 AM IST (Updated: 29 Dec 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

ஜீவசமாதி அடைய முருகன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், இதனால் அவருக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும் அவரது வக்கீல் தெரிவித்தார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜெயில் அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி கடந்த 21-ந் தேதி முதல் ஜெயிலில் வழங்கப்படும் உணவை சாப்பிட முருகன் மறுத்து வருகிறார். ஆனால் அவர் பழங்களை மட்டும் உட்கொள்வதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முருகனை அவரது வக்கீல் புகழேந்தி நேற்று ஜெயிலில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தன்னுடைய ஆன்மிக வாழ்க்கையை சிறைத்துறையினர் சிதைத்து விட்டதாக முருகன் தெரிவித்தார். மேலும் அவர், அடிப்படை வசதிகளை சிறை நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை. தொடர்ந்து மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். எனது மனைவி தரும் உணவு பொருட்களை கூட பெற சிறை அதிகாரிகள் தடுக்கின்றனர். என்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி வேண்டுகோள் வைத்துள்ளேன். அதிலும் நடவடிக்கை இல்லை என்றார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முருகன் கடந்த 21-ந் தேதி முதல் ஜீவசமாதி அடைவதற்காக தண்ணீர் கூட குடிக்காமல் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார். உண்ணாவிரதம் தொடங்கும் முன்பு அவர் 64 கிலோ எடை இருந்தார். தற்போது 42 கிலோ எடையில் உள்ளார். இன்று (நேற்று) காலை அவருக்கு சிறை டாக்டர்கள் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றினர். அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நளினியை சந்தித்த பின் புகழேந்தி கூறுகையில், வேலூர் ஜெயிலில் முருகன் துன்புறுத்தப்படுவதால், அவரை மதுரை ஜெயிலிலுக்கு மாற்ற கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக நளினி முடிவெடுத்துள்ளார் என்றார்.

Next Story