குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் காதர் முகைதீன் பேட்டி


குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் காதர் முகைதீன் பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2019 3:30 AM IST (Updated: 29 Dec 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.

நெல்லை,

குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குழப்பத்தை ஏற்படுத்த...

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 15 வகையாக தகவல்கள் கேட்கப்பட்டன. தற்போது கூடுதலாக 6 தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் தாய்-தந்தை பிறந்த இடம், தேதி உள்ளிட்ட தகவல்களை கேட்கிறார்கள். இதனை நாங்கள் எதிர்க்கிறோம்.

தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தால் அசாமில் 19 லட்சம் பேர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்தியா முழுவதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது. இந்தியாவில் அகதிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

சமய சார்பின்மை

இந்த சட்டம் மதரீதியாக பிளவு ஏற்படுத்துவது போல் இருப்பதால் சட்டத்தை எதிர்க்கிறோம். இதுபோன்ற சட்டங்கள் இதுவரை கொண்டு வரவில்லை. இந்த சட்டம் மக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி சமய சார்பின்மையை கேள்விக்குறியாக்குகிறது.

இதன் மூலம் இந்துத்துவா கொள்கைகளை திணிக்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்று கூறி அதற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. புதிய தொழிற்சாலைகள் உருவாக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுவதன் நோக்கம் என்ன?. பிரச்சினைகளை, குடியுரிமை சட்டம் மூலம் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு திசைதிருப்புகிறது. இலங்கை தமிழர்களை இந்த சட்டம் ஏற்க மறுக்கிறது.

துரோகம் இழைத்து விட்டனர்

இந்த சட்டத்தை அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அவர்கள் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்ட னர். குடியுரிமை சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக பார்க்க கூடாது. இந்த சட்டம் ஒவ்வொரு குடிமக்களுக்கும் எதிரானது. இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறாம்.

எங்கள் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எங்களது போராட்டம் தொடரும். மக்களிடம் எழுச்சி ஏற்பட்டு விட்டது. ஆங்காங்கே அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்கிறார்கள். இதற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்கள்

தி.மு.க. தலைமையில் சென்னையில் மிக பிரமாண்டமான பேரணி கட்டுப்பாட்டுடன் நடந்தது. அடுத்த கட்டமாக உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் நடத்தப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் போராட தொடங்கி விட்டார். இந்த நிலை நீடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொருளாளர் ‌ஷாஜகான், மாநில செயலாளர் நிஜாமுதீன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மீரான் மைதீன், செயலாளர் பாட்டப்பத்து முகமது அலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நவாஸ்கனி எம்.பி.

இதைத்தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கவுரவ ஆலோசகரும், ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யுமான நவாஸ்கனி மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மேல்சபையில் அ.தி.மு.க. ஆதரவு அளித்து இருக்க கூடாது. அ.தி.மு.க.வுக்கு மக்கள் நலன் மீது அக்கறை கிடையாது. தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கை தமிழர்கள் நலன் உள்பட எதையும் இழக்க அவர்கள் தயாராக உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை அனைத்து தரப்பு போராட்டம் தொடரும் என்றார்.

அப்போது நெல்லை துணைத்தலைவர் சாகுல் அமீது, நகர தலைவர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், செயலாளர் ஜாகீர் உசேன், வக்கீல் மதார் மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story