வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - கலெக்டர் தகவல்


வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Dec 2019 10:30 PM GMT (Updated: 28 Dec 2019 9:49 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.

பனைக்குளம், 

மண்டபம் யூனியனுக்குட்பட்ட உள்ளாட்சி முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகளை வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முத்திரையிட்டு வாக்கு எண்ணும் ்மையமான செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான வீரராகவராவ் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 68.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 1,28,324 ஆண் வாக்காளர்களும், 1,57,069 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் வாக்களித்துள்ளனர்.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியிலும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு முத்துப்பேட்டை, கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் அந்தந்த தேர்வு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் தேர்தல் மண்டல குழு அலுவலர்கள் மூலமாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப் பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அறைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு பணியில் ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவகாமி, உதவி பொறியாளர் அருண்பிரசாத், மண்டபம் யூனியன் ஆணையாளரும் தேர்தல் பொறுப்பாளருமான சேவுகப்பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்பட யூனியன் மேலாளர்கள், பொறியாளர்கள், அரசு அலுவலர்கள், பட்டணம்காத்தான் ஊராட்சி செயலர் நாகேந்திரன், மண்டபம் யூனியனுக்குட்பட்ட ஊராட்சி செயலர்கள், வேட்பாளர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, கவிதா கதிரேசன், ஸ்டாலின் ஜெயச்சந்திரன், சாத்தையா, புலிகேசி, முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story