மத கலவரங்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு


மத கலவரங்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Dec 2019 4:30 AM IST (Updated: 29 Dec 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

மத கலவரங்களை தூண்டிவிட்டு எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் கே. டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இந்த விருது அரசு வெளிப்படைத்தன்மையாக செயல்படுகி்றது என்பதற்கு இது உதாரணம்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு உரிய அனுமதி வழங்கப்பட்டு வங்கிக் கடன், உதவிகள் செய்யப்படுகிறது.உள்ளாட்சி, வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வல்லநாடு கூட்டுக்குடிநீர் திட்டம், சீவலப்பேரி குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களை நாங்கள்தான் கொண்டு வந்துள்ளோம். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவர முடியாது என்று அப்போது சிலர் கேலி பேசினர். ஆனால் சொன்ன வாக்குறுதிப்படி நாங்கள் தாமிரபரணி கூட்டு குடிநீரை விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அனைத்து திட்டங்களும் எளிதாக பொதுமக்களுக்கு கிடைக்கிறது.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மக்களோடு மக்களாக உட்கார்ந்து பேசி வாக்கு சேகரித்து வருகிறோம். இந்தியாவிலேயே சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கியது மூலம் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி இன்னும் சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும். நாட்டில் உள்ள பல்வேறு மாநிலத்திற்கும் நான் சென்று வந்துள்ளேன். தமிழகத்தை போன்று சாலை வசதிகள் கட்டமைப்பு வசதிகள் எந்த மாநிலத்திலும் கிடையாது. ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார்,கேரளா உள்பட எந்த மாநிலத்திலும் உருப்படியான சாலை வசதிகள் கிடையாது.

ஆனால் தமிழகத்தில் கிராமப்புற சாலைகள் கூட மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதனால் எந்த பகுதியிலும் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை. மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் உருவாகிவிட்டது. தி.மு.க. மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது. அதனால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அனைத்து வழிகளையும் தி.மு.க. தேடிக் கொண்டே தான் இருக்கி்றது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி முதல்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. நீதிமன்றத்திற்கு தி.மு.க. எத்தனை முறை படையெடுத்து சென்றாலும் உள்ளாட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்.

சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர்களுக்கும் தமிழுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பாதுகாப்பு கிடைக்கும். 10 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது தமிழுக்காக தமிழக மக்களுக்காக தி.மு.க. ஒரு நன்மையும் செய்யவில்லை.வெளிநாட்டில் பணத்தை வாங்கி கொண்டு இந்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் சிலர் தொடர்ந்து கருத்துகளை பரப்பி வருகின்றனர். நாடு சுதந்திரம் அடையும் போது பாகிஸ்தானில் 30 சதவீத இந்துக்கள் இருந்தனர்.

தற்போது அங்கு வெறும் 7 சதவீத இந்துக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் 7 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே வாழ்ந்தனர். தற்போது 30 சதவீதமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஆதரவாக இந்தியாவில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் தேவையின்றி போராட்டங்களை தூண்டி விட்டு வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஏதாவது பாதிப்பு என்றால் அதில் முதல் ஆளாக போராட்டக்களத்தில் அ.தி.மு.க. நிற்கும். இந்தியாவில் தமிழகத்தில் இந்துக்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் நண்பர்களாக உறவினர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இதில் மத கலவரத்தை தூண்டிவிட்டு மலிவான அரசியல் தேடும் அரசியல் கட்சிகளை பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும். இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்யும் தி.மு.க.விற்கு பொது மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மம்தா பானர்ஜி ஒரு முதல்வர் என்ற பொறுப்பு கூட இல்லாமல் கலவரங்களை தூண்டி விடுகிறார். முதல்வர் பதவிக்கான தகுதியை மம்தா பானர்ஜி இழந்து விட்டார். நாட்டின் அமைதிக்காக ஒரு முதல்-அமைச்சர் பாடுபடவேண்டும். கலவரத்தைத் தூண்டி விடக்கூடாது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முகலாயர் காலத்தில் இருந்து முஸ்லிம்கள் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்தது கிடையாது. தற்போது எதிர்க்கட்சிகளால் கலவரம் தூண்டி விடப்படுகிறது. கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்து வருகின்றது. மத ரீதியான பிரச்சினைகளை தூண்டிவிட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் சேது ராமானுஜம், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, சாத்தூர் நகர செயலாளர் வாசன், கிருஷ்ணன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Next Story