ஓட்டுப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்தன - துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து சேர்ந்துள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று 92,729 ஆண் வாக்காளர்களும், 97,577 பெண் வாக்காளர்களும், 23 திருநங்கைகள் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 54 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 243 பேர் போட்டியிட்டனர்.அதேபோல் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 1163 பேர் களத்தில் இருந்தனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 188 பேரும், அதே போல் 3 மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு 23 பேர் போட்டியிட்டனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 326 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 15 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து முடிந் தது.இளம் வாக்காளர்கள் அதிக ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.பல இடங்களில் வாக்காளர்களுக்கு உரிய முறையில் பூத்சிலிப் வினியோகம் செய்யப்படாததால் பெரும்பாலான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற முடியாமல் போனது. இந்த யூனியனில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 329 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் இருந்தும் 1 லட்சத்து 32 ஆயிரத்து 965 பேர் மட்டுமே வாக்களித்தனர்.இதனால் இந்த யூனியனில் 69.86 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது.
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் அதிக அள வில் தொழிலாளர்கள் வசிக் கும் கிராமங்கள் என்பதால் பல இடங்களில் மாலை நேரங்களில் தொழிலாளர்கள் மொத்த, மொத்தமாக வந்து வரிசையில் நின்று டோக்கன் பெற்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.இதனால் பல வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனால் வாக்குப்பதிவு சதவீதம் கூற இரவு 9 மணியை தாண்டியது.பின்னர் வாக்குச்சாவடிகளில் இருந்து ஓட்டுப் பெட்டிகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.அங்கு தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப் பெட்டிகளை சரிபார்த்தனர்.
வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு ஓட்டுப் பெட்டிகள் பள்ளியின் முதல் மாடியில் 4 அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது. சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் உள்பட பலர் இந்த பணியில் ஈடுபட்டனர்.சீல் வைக்கப்பட்ட 4 அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிக்காக இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், போலீசார் 57 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகளை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆய்வு செய்தார். வருகிற 3-ந்தேதி வரை வாக்கு எண்ணும் மையம் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
Related Tags :
Next Story